அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி - மதனப்பள்ளியில் தக்காளியை ரோட்டில்
கொட்டும் விவசாயிகள் - 2001 ம் ஆண்டு முதல் பக்க செய்தி. பேருந்து முன்பதிவுகளை
ஆன்லைன் வழியாக செய்துகொள்வதற்கான இணையதள வர்த்தக அமைப்பை உருவாக்க
முயன்றுவந்த சாப்ட்வேர் என்ஜினியர்கள் குழுவை வழிநடத்திய திருச்செல்வம்
ராமுவால் இந்த செய்தியை சாதாரணமாக கடந்து போகமுடியவில்லை. தகவல் தொடர்பு
தொழில் நுட்பத்தின் வலிமையை உணர்ந்திருந்த அவர் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத
பிரச்சினையை தீர்க்க முடியும் என நம்பினார். அதற்கான அணுகுமுறையை தனது
சகாக்களிடம் எடுத்துரைத்தபோது வந்த கருத்து : 'திட்டம் சாத்தியம்தான். ஆனால்
கிராமப்புற, குறிப்பாக விவசாயத்துறையின் முக்கிய பங்குதாரர் அரசாங்கம். எனவே
அரசுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்துவது அவசியம்'. அதனடிப்படையில்
விவசாயப் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை உருவாக்கினர்.
Mission IT -Rural எனும் அடையாளத்தில் செயல்பட
ஆரம்பித்தனர். மாநில அரசுகளை
தொடர்புகொள்ள தொடங்கினர். அரசுடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையாக
இருப்பதால் திட்டம் செயல்படுத்தப் படுத்துவற்கான கால அவகாசம் உறுதியாக கணிக்க
முடியாது என்பதால் திருச்செல்வம் ராமு முழு நேரமாக இந்தப் பணியில் ஈடுபடுவது
என்றும் மற்றவர்கள் அதற்கான நிதியை வழங்குவது என்றும் தீர்மானித்தனர்.
தொடர்முயற்சிகளுக்கு பலனாக 2004 ம் ஆண்டு, புலிவேந்துலா மண்டல் ( ஒன்றியம்), கடப்பா மாவட்டம், ஆந்திராவில் உள்ள 10 பஞ்சயாத்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. மக்களின் சிறப்பான ஒத்துழைப்போடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டது. (2004 - 09).
தீர்வை கடப்பா மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசின் (RKVY)
திட்டத்திற்கு மாநில அரசு பரிந்துரை செய்தது. தீர்வின் விளைவுகளை ஆய்வு செய்த
மாநில மத்திய அரசின் உயர்மட்ட கூட்டுக்குழு, இத்திட்டம் இந்திய விவசாயத்தில்
புதிய
பரிமாணத்தை ஏற்படுத்தும் என்கிற மதிப்பீட்டோடு ஒப்புதல் வழங்கியது. ஆனால்,
ஆந்திராவில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகளால் இத்திட்டம் செயல்படுத்த முடியாமல்
போனது.
மாதிரி திட்டத்தின் விளைவுகள் மற்றும் அரசு உயர்மட்டக் குழுவின் மதிப்பீடு
வழங்கிய
நம்பிக்கையில் Mission IT-Rural மனம் தளராமல் பயணித்தது.
IIT - Madras, Nasscom Foundation, IL&FS, C- Dac போன்ற அமைப்புகளோடு விவசாயம்
தொடர்புடைய திட்டங்களில் இணைந்து செயல்பட்டது.
தண்ணீர் பிரச்சினைகள் தமிழகத்தில் 2017 ம் ஆண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. விவசாய மேலாண்மையோடு, மக்கள் பங்களிப்புடன் கூடிய நீர் மேலாண்மை எனும் அணுகுமுறையை உருவாக்கி 2017 -21 வரை தமிழ் நாடு, சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் உள்ள வேப்பங்குளம் பஞ்சாயத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியது. மக்கள் நிதிப்பங்களிப்போடு கிராம நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு மடை திறந்து விவசாயம் செய்யும் சூழல் உருவானது. அரசு நெல்கொள்முதல் மையம், மதிப்புக் கூட்டி விற்பனை போன்ற சந்தைப்படுத்துதல் மேம்பட்டது.
இதனடிப்படையில், வேப்பங்குளத்தில் தமிழகத்தின் முன்மாதிரி திட்டமாக, Mission IT-Rural முன்வைத்த திட்டத்தை ஏற்று உழவர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டாண்டுகள் (2021- 23 வரை, இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது (குறிப்பாக சிறு, குறு விவசாயிகளின் விளைபொருட்கள் online வர்த்தகம் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் கூரியர் சேவை மூலம் தமிழகமெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டது). திட்ட அறிக்கைகள் விரிவாக்கத்திற்காக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தீவிர பரிசீலனைக்கு பின் சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு ஒரு பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டு 12 உழவர் உதவி மையங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு கட்டமைப்பு செலவுகளையும் மிஷன் ஐடி- ரூரல் ஒரு உழவர் உதவி மையத்திற்கு இருவரை பணிக்கு அமர்த்தி திட்டமிடுதல் முதல் விற்பனை வரையிலான சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல் மற்றும் அவர்களுக்கான ஊதியத்திற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்ளுதல் என்கிற வகையில் திட்டம் செயல்படும்.
ஒரு கிராமம் நினைத்தால் நீர் நிலைகளை, விவசாயத்தை மீட்டெடுக்க முடியும் என்பதற்கான உதாரணமாக வேப்பங்குளம் நம்பிக்கை தருகிறது.
நாட்டாகுடி கிராம மறு சீரமைப்பு (சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு)- கிராம மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான மிக முக்கிய திட்டத்தில் Mission IT-Rural...
மிக முக்கிய அடுத்தக்கட்ட நகர்வு...தொடர்ந்து பயணிப்போம்...